மியான்மரில் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன: அமெரிக்கா

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு மியான்மார் அரசு ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது ராணுவ ஒடுக்குமுறையை செலுத்தியது மற்றும் இனக்கலவரத்தை தூண்டியது. யான்மர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மர் அரசு ராணுவ நடவடிக்கையில் இறங்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன் மியான்மார் அரசு ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது ராணுவத்தை கொண்டு அந்த மக்களை கொன்று குவித்தது. ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்தது.

மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் இன அழிப்பு நடந்ததாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தன. இதற்கு மியான்மர் ராணுவமும், மியான்மர் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடந்ததற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்காவிலுள்ள மெமோரியல் மியூசியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை மெமோரியல் மியூசியம் கூறும்போது, “கடந்த ஒருவருடமாக தென்கிழக்கு ஆசிய உரிமைக் குழுவுடன் இணைந்து நடந்திய ஆய்வில் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடந்ததற்காக நிறைய ஆதரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆய்வு தொடர்பாக சுமார் 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கிய மக்கள் மற்றும் மியான்மர் தொழிலாளர்களிடம் நேர்காணல்கள் நடந்தப்பட்டன”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடக்கும் வன்முறைகள் இன அழிப்பு நடைபெறுவதற்கான பாடப் புத்தகம் சான்று என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top