நீதிபதிகள் லஞ்சம் பெறப்பட்ட விவகாரம்: மனு தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

 

நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக மனுதாரர்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

லக்னோவை சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளையின் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற விஸ்வநாத் என்ற இடைத்தரகரை அறக்கட்டளை நிர்வாகிகள் அணுகினர். ஒடிஷா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் சில நீதிபதிகளின் பெயரில் அவர் பெருந்தொகையை பெற்றார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி இடைத்தரகர் விஸ்வநாத், ஒடிஷா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஸ்ரத் மஸ்டூர் குட்டூசியை கைது செய்தனர்.

 

இந்நிலையில், நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக ‘நீதி நம்பகத்தன்மை, சீர்திருத்தத்துக்கான பிரச்சார இயக்கம்’ (சிஜேஏஆர்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் காமினி ஜெய்ஸ்வால் மனுவை நீதிபதிகள் செலமேஸ்வர், அப்துல் நசீர் அமர்வு கடந்த 9-ம் தேதி விசாரித்து, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது.

 

அடுத்த நாள் 10-ம் தேதி சிஜேஏஆர் அமைப்பின் மனு நீதிபதி ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரே விவகாரம் தொடர்பாக 2 வழக்குகள் தொடரப்பட்டிருப்பதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 2 மனுக்களையும் ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட்டனர்.

 

அன்றைய தினம் மாலை அவசரமாக கூடிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, நீதிபதி செலமேஸ்வரின் உத்தரவை ரத்து செய்தது. தலைமை நீதிபதி தவிர வேறு நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு ஒரு வழக்கை மாற்ற முடியாது என்று அந்த அமர்வு கூறியது.

 

இந்தப் பின்னணியில் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வாலின் மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஏ.கே.அகர்வால், ஏ.எம். கான்வில்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் காமினி ஜெய்ஸ்வால் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டனர்.

 

அவர்கள் கூறியதாவது: மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் அமர்வு விசாரித்தது. எனவே இருவரும் நீதித்துறை, நிர்வாகரீதியாக எங்களது வழக்கில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். இதில் உள்நோக்கம் இல்லை. அதன் அடிப்படையில் தற்போதைய அமர்வில் இருந்து நீதிபதி ஏ.எம். கான்வில்கர் விலக கோருகிறோம். நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் சாராம்சம் வருமாறு: உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை நீதிபதியே தீர்மானிப்பார். நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட வழக்கின் எப்.ஐ.ஆரில் எந்தவொரு நீதிபதியின் பெயரும் குறிப்பிடப்பட வில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சிஜேஏஆர் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்தார். அடுத்த நாள் அதே அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் மனு தாக்கல் செய்திருக்கிறார். காமினி வழக்கை செலமேஸ்வர் அமர்வு விசாரித்தபோது ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் தகவலை தெரிவிக்கவில்லை. இது சட்டவிரோதம்.

 

எந்த வழக்கை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பது தலைமை நீதிபதியின் முடிவு. தற்போதைய அமர்வில் இருந்து நீதிபதி கான்வில்கரை விலகச் சொல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. சட்ட விதிகளை ஆராயாமல் மூத்த வழக்கறிஞர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதனால் உச்ச நீதிமன்றத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நேர்மை குறித்து தேவையற்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

 

லஞ்சம் பெறப்பட்டதாக எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியின்போது அதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. தலைமை நீதிபதி மீது மனுதாரர்கள் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் நீதிமன்ற அவமதிப்புக்கு சமமாகும். நாங்கள் (நீதிபதிகள்) சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை. ஆனால் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர விரும்பவில்லை. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top