தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்ப்புடன் ரஷிய பிரதமர் சந்திப்பு

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் இன்று ‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில்  சந்தித்து பேசினார்.
‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன பிரதமர் லி கெக்கியாங், ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் உள்பட இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு இடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் இன்று சந்தித்து பேசினார்.

ஆசியான் அமைப்பு தொடங்கப்பட்டதன் ஐம்பதாவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின்போது இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிரம்ப் மிகவும் வெளிப்படையானவர், நன்கு புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவர் என டிமிட்ரி மெட்வடேவ் குறிப்பிட்டதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ரஷியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு மிகவும் சீர்குலைந்து வருவதாக ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் குறிப்பிட்டிருந்தார். போட்டி நாடாக இருந்த ரஷியா தற்போது அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு பொருளாதார தடைகளால் எதிரி நாடாக பார்க்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்திருந்த நிலையில், டொனால்ட் டிரம்ப்பை – டிமிட்ரி மெட்வடேவ் இடையிலான இன்றைய சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top