நீட் பயிற்சி மையம் திறப்பு; வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எடப்பாடிக்கு கடும் கண்டனம்

 

தமிழக அரசு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை தொடங்குவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

நீட் உள்பட நடுவண் அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி மையங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி.

முதற்கட்டமாக சேலம், திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் அவற்றை ஒட்டியுள்ள இதர மாவட்டப் பகுதிகளுக்குமான 100 பயிற்சி மையங்களை சென்னை கலைவாணர் அரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்திருக்கிறார்.

 

பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 412 பயிற்சி மையங்கள் அமைக்க கடந்த அக்டோபர் 25ந் தேதியன்று தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கானது. “எந்த நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வையும் தயக்கமின்றி மாணவர்கள் சந்திக்கவும் சென்னையை அறிவுத் தலைநகராக உருவாக்கவுமே இந்தப் பயிற்சி மையங்கள் திறக்கப்படுகிண்றன. ஸ்பீடு அறக்கட்டளையுடன் இணைந்து இந்தப் பணியை தமிழக அரசு மேற்கொள்கிறது” என்று இதன் தொடக்க விழாவில் உரையாற்றினார் முதலமைச்சர்.

 

இதில் முதலமைச்சருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கேட்கும் கேள்வி மிக மிக எளிமையானது. அதாவது, “தமிழகத்தின் ஒரே குரலாக ‘நீட்டை நிராகரித்து’ தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய நீட்-விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக டெல்லிக்கு அனுப்பி வைத்தீர்களே, அதைத் திரும்பப் பெற்றுவிட்டீர்களா?” என்பதுதான். எப்படியும் நீட்டை ஓட்டிவிடுவோம் என்று சொல்லியே மாணவி அனிதாவை சாகடித்தீர்கள். அதற்காக தமிழகமே கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது.

 

 

அந்தக் கண்ணீரைப் பொருட்படுத்தாமல் நீட் பயிற்சி மையத்தை அமைக்கிறீர்கள் என்றால் “பச்சைத் துரோகத்தை” முதலமைச்சரே செய்கிறார் என்பதன்றி வேறென்ன? இந்த நயவஞ்சக மோசடிச் செயலில் மாநிலத்தின் முதலமைச்சரே ஈடுபடுகிறார் என்பதைப் பார்க்கும்போது, “வாந்தி எடுத்ததையே உட்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறதா? தமிழக அரசு அதை ஏற்றுக் கொண்டதா?” என்ற சந்தேகமே எழுகிறது. “இல்லையென்றால் ‘நீட்’ போன்றவற்றுக்கென பயிற்சி மையங்களை ஏற்படுத்துவது ஏன்? மாணவர்களின் எதிர்காலத்தை முதலமைச்சர் பழனிச்சாமியே மோடி சாமிக்குப் பலியிடலாமா?” என்ற கேள்விகளை எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

 

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுமானால் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை உயர்த்த வேண்டும்; ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பள்ளிக் கல்விக்கான பட்ஜெட் நிதியை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் வழியே தவிர நாம் நிராகரித்த நீட் போன்றவற்றுக்குப் பயிற்சி மையங்கள் அமைப்பது அல்ல.தனியாரோடு இத்தகைய ஒப்பந்தங்கள் என்பது ‘ஊழல்’ என்ற சொல்லையே உறுதிப்படுத்தும்.எனவே உடனடியாக இந்த ஏற்பாட்டைக் கைவிடுவதுடன் நடுவண் அரசின் சொக்காயைப் பிடித்து உலுக்கி நீட்-விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெறுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top