தேவஸ்தான அதிகாரிகளின் பதவிக்காலம் குறைப்பு;கேரள அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் சதாசிவம் ஒப்புதல்

 

திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் கேரள அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கவர்னர் சதாசிவம் இன்று கையொப்பமிட்டார்.

 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில், பத்மநாபசுவாமி கோயில் உள்பட சுமார் 1500 இந்து ஆலயங்களை அம்மாநில அரசின் அறநிலையத்துறையின்கீழ் இயங்கிவரும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் நிர்வகித்து வருகிறது.

இந்த வாரியத்தின் சார்பில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களது பதவிக்காலத்தை மூன்றாண்டுகளில் இருந்து இரண்டாண்டுகளாக குறைக்க முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மந்திரிசபை கடந்த 9-ம் தேதி தீர்மானித்தது.

இதைதொடர்ந்து, இதற்கென சட்டதிருத்தம் செய்து அவசர சட்டமும் இயற்றப்பட்டது. இந்த அவசர சட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்று மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது

.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது இந்த தேவஸ்தானம் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பிரையார் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டவர்களின் பதவியை பறிப்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக காங்கிரஸ் கருதுகிறது.

இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கவர்னர் சதாசிவம் கையொப்பமிட கூடாது என அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார். பா.ஜ.க.வும் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து வரும் நிலையில், கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த அவசர சட்டத்தில் கவர்னர் சதாசிவம் கையொப்பமிடாமல் மாநில அரசுக்கே நேற்று திருப்பி அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

மாநில அரசிடம் இருந்து சில விளக்கங்களை கேட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் குறிப்பிட்டிருந்தன. பின்னர், கேரள அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கவர்னரை தொடர்புகொண்டார். இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட வேண்டிய அவசியம் தொடர்பாக தேவையான விளக்கங்களை அளித்தார்.

இதையடுத்து, திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் கேரள அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கவர்னர் சதாசிவம் கையொப்பமிட்டார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top