நீதிபதிகள் மீதான லஞ்சப்புகார்; மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா? சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு

நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பது பற்றிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது

 

ஒடிசா ஐகோர்ட்டு மற்றும் சத்தீஷ்கார் ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றியவர் இஷ்ரத் மஸ்ரூர் குட்டுசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

 

இவர் உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ. கடந்த செப்டம்பர் 19–ந் தேதி ஊழல் வழக்கு பதிவு செய்தது.

 

இந்த வழக்கை சுட்டிக்காட்டி, ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் காமினி ஜெய்ஸ்வால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வழக்கில் சாதகமான தீர்ப்பு பெறுவதற்காக, நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும், தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதும் அதில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

 

இந்த மனு, கடந்த 9–ந் தேதி, நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. 5 மூத்த நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்று செல்லமேஸ்வர் உத்தரவிட்டார்.

மறுநாள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

 

வழக்குகளை யார் யார் விசாரிப்பது என்று ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே இருப்பதாக கூறி, செல்லமேஸ்வர் அமர்வின் உத்தரவை ரத்து செய்தது.

 

இதையடுத்து, நேற்று இந்த மனு, நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

குறிப்பிட்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என்று கேட்பது முறைதானா? என்று மனுதாரரின் வக்கீலான பிரசாந்த் பூ‌ஷணிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இந்த மனு நீதித்துறையின் நற்பெயரை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், மனுவை மனுதாரர் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

இதையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பது பற்றிய தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 14–ந் தேதி (இன்று) தீர்ப்பு அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top