ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்; துரைமுருகன் அறிக்கை

 

திமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் நேற்று கொடுத்த அறிக்கையில் ‘’ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும்’’ என்று கூறியிருந்தார்.

 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் ஏதோ கனவு பலிக்காது, கானல் நீர் ஆகும் என்றெல்லாம் எங்களுடைய செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து விமர்சித்துள்ள முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றவும் நிர்வாகத் திறமையில்லாத இந்த இரட்டையர்கள் பொதுப்பணித்துறைக்கு பொறுப்பேற்று இருந்த காலம் தான் அந்தத் துறையின் இருண்ட காலம் என்று இன்றைக்கு பொறியாளர்கள் எல்லாம் வேதனைப் படுகிறார்கள். பல பொறியாளர்கள் என்னிடமே நேரில் வந்து புகார் கூறுகிறார்கள்.

 

பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த காலத்தில் கால்வாய்கள் அமைப்பது, தூர்வாருவது, தடுப்பணைகள் கட்டுவது, குளங்கள், ஏரிகள், வெள்ள தடுப்பு பணிகள், வெள்ள மேலாண்மைப் பணிகள், கடலோர மாவட்ட பாதிப்புகளை தடுக்கும் பணிகள் என்று ஏறக்குறைய 3500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கணக்கு காட்டியிருக்கிறார்.

 

முதல்–அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, முதலில் 100 கோடி ரூபாயும், அடுத்து ரூ.300 கோடி ரூபாயும் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து ஏரிகளை தூர் வாருவதாக அறிவித்தார். அந்த ரூ.400 கோடிக்கான பணிகளை இதுவரை கண்ணால் பாக்க முடியவில்லை. ரூ.400 கோடி என்ன ஆச்சு என்று ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள், என்று எங்கள் செயல் தலைவர் பலமுறை கேட்டு விட்டார். ஆனால் இதுவரை அது பற்றி வாய் திறக்க இயலாத எடப்பாடி பழனிசாமி, இப்போது புதிதாக ஏரிகளை தூர் வார ரூ.300 கோடியும், தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடியும் நிதி ஒதுக்கப்போவதாகவும் நெல்லை பொதுக்கூட்டத்தில் வீர வசனம் பேசியிருக்கிறார். ஆக 1,300 கோடி ரூபாயில் அடுத்த திட்டம் ரெடி என்பதுதான் முதல்–அமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பிலிருந்து வெளிப்படுகிறது.

 

பொதுப்பணித்துறையைப் பொறுத்த மட்டில் இந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகள் நீர் நிலைகள் தொடர்பான பணிகளுக்காக இப்போது அறிவித்துள்ள 1,300 கோடி ரூபாயையும் சேர்த்து, இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள நிதி 5,000 கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

 

ஆனால் இன்றைக்கு சென்னையும், சென்னை புறநகரும் ஒரு மழைக்கே தத்தளித்து நிற்கிறது. சென்னை புறநகர் குளங்கள் நிரம்பிய குடியிருப்புகளாக காட்சியளித்து, அங்கு உள்ள மக்கள் எல்லாம் சொல்லொனாத் துயரத்தில் சிக்கி துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் மீது வீசும் ஊழல் துர்நாற்றத்திற்கு பன்னீர் தெளிக்கும் வேலைக்கு, அரசு கஜானாவில் இருந்து பணத்தை எடுத்து செலவிடுவதை இந்த இரட்டையர்கள் உடனே கைவிட வேண்டும்.

 

மேலும் வெள்ள அபாயம், கன மழை அபாயம் போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க இயலாத பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் 5,000 கோடி ரூபாய் வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top