சோழர், விஜய நகர காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகல்கள் திருப்பத்தூர் அருகே கண்டுபிடிப்பு

 

திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை சாலையிலிருந்து 4 கி.மீ., தொலைவில் மல்லப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. மல்லர் பள்ளி என்ற இந்த கிராமம், பின்னர் பெயர் மறுவி மல்லப் பள்ளியாக அழைக்கப்பட்டு வருகிறது.

 

‘மல்லர்’ என்றால் வீரர் என்று பொருள். பள்ளி என்பது அவர்கள் இருந்த இடத்தை குறிக்கிறது. இந்த ஊரின் பெயருக்கு ஏற்றார்போல் பல போர்கள் நடந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்த ஊரில் வரலாற்றுச் சிறப்புமிக்க 3 நடுகல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நடுகல்களும் சோழர், ஓய்சாளர் மற்றும் விஜய நகர பேரரசர் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கும் என தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் கணித்துள்ளார்.

சோழர் காலத்தைச் சேர்ந்த நடுகல், அரசனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக உள்ளது. அதன் தலையில் கிரீடம், இடதுபுறம் வாரி முடித்துள்ள கொண்டை, காதுகளில் நீண்ட காதணி, மார்பில் ஏராளமான ஆபரணங்கள், இடையில் வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய ஆடை, இடையில் குறுவாள், இடது கால் வளைந்த நிலையில் அரசர் உருவம் உள்ளது.

 

கால்களில் வீரக் கழலும், கைகளில் கடகமும் அணிந்த நிலையில் உள்ளது. வலது கையில் வில்லுடன் சேர்த்து அம்பையும், இடது கையில் வாளை ஏந்தியபடியும் நடுகல் வடிவமைக்கப் பட்டுள் ளது.

2-வது நடுகல்லில், இடது கையில் வில்லும், வலது கை இடுப்பிலுள்ள குறவாளை பிடித்தவாறு காணப்படுகிறது. 3-வது நடுகல்லில், இடது கையில் வில்லும், வலது கையில் குறவாளைப்பிடித்த நிலையில் உள்ளது.

 

மூன்று நடுகல்களும் ஊருக்கு வெளியே வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு சிறிய கோயிலில் 3 நடுகல்களையும் வைத்துள்ளனர். இந்த நடுகல்களுக்கு இப்பகுதி மக்கள் வேடியப்பன் என பெயரிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top