டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் காற்று மாசு காணப்படுகிறது. காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 474 என்ற அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புகை போன்று காற்று மாசு சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வாகனங்களுக்கு 5 நாட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்திற்கு, நிபந்தனையுடம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து காற்று மாசை குறைப்பதற்காக நவம்பர் 13ம்- தேதி முதல் 17ம்- தேதி வரை ஐந்து நாட்கள் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒன்றை இலக்க தேதிகளில் ஒன்றை இலக்க எண் கொண்ட கார்கள் அனுமதிக்கப்படும். இரட்டை இலக்க தேதிகளில் இரட்டை இலக்க எண் கொண்ட கார்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி அரசின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தியது. பின்னர் தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி சுவதந்தர் குமார் கூறியதாவது:
‘‘டெல்லியில் நவம்பர் 13ம்- தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்கள் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம். அதேசமயம், இதில் அதிகாரிகள் உட்பட யாருக்கும் விதி விலக்கு அளிக்க கூடாது. இருசக்கர வாகனங்களுக்கும் விலக்கு அளிக்க கூடாது. அதேசமயம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் வாகன கட்டுப்பாடு காரணமாக காற்று மாசு எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை அளவிட வேண்டும். காற்று மாசு பாதிப்பை குறைக்க தண்ணீர் தெளிப்பதால் ஏற்படும் பயன் குறித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வாகனங்களுக்கான நிறுத்துமிட கட்டணம் குறித்து டெல்லி மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும்’’ எனக்கூறினார்.
இதை தொடர்ந்து, அடுத்த 10 நாட்களுக்கு காற்று மாசு அளவு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, மாசுகட்டுப்பாட்டு வாரிய இயக்குனர், போக்குவரத்து ஆணையர், சுற்றுச்சூழல்துறை கூடுதல் செயலர், டெல்லி மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விஞ்ஞானி உள்ளிட்டோர் அடங்கிய குழுவையும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.