சவுதிஅரேபியா மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை : ஈரான் எச்சரிக்கை

டெக்ரான்:

அரபு நாடுகளில் சவுதிஅரேபியாவில் சன்னி முஸ்லிம்களும், ஈரானில் ஷியா முஸ்லிம்களும் உள்ளனர். சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே ஏற்கனவே மோதல் போக்கு உள்ளது. அரபு நாடுகள் பலவற்றிலும் இந்த நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் சவுதிஅரேபியாவுக்கு அருகே உள்ள ஏமன் நாட்டில் உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது.
ஏமன் நாட்டின் அரசுக்கு உதவும் வகையில் ஹவுதி படையினர் மீது சவுதிஅரேபியா தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஹவுதி படையினர் சவுதிஅரேபியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில் ஹவுதி படையினர் வீசிய ஏவுகணை தலைநகர் ரியாத்தில் விழுந்தது. இது சவுதிஅரேபியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹவுதி அமைப்பினருக்கு ஈரான் ஆயுத உதவி செய்வதாகவும், இதனால் தான் அவர்கள் இந்த தாக்குதலை நடத்துகிறார்கள் என்று சவுதி அரேபியா கருதியது. எனவே 3 நாட்களுக்கு முன்பு சவுதிஅரேபியா இளவரசர் முகமதுபின் சல்மான் ஹவுதி அமைப்பினருக்கு ஆயுத உதவி செய்வதை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம் என்று எச்சரித்தார்.

இது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்மந்தமாக ஈரான் அதிபர் ஹசன்ரவுகானி கூறியதாவது:-

ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினருக்கு நாங்கள் எந்த ஆயுத உதவியும் செய்யவில்லை. ஏமனின் வளர்ச்சிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை கூறி எங்கள் மீது போர் தொடுப்போம் என்று சவுதிஅரேபியா கூறியுள்ளது.

ஆனால் சவுதிஅரேபியா மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. அவர்கள் தாக்குதல் நடத்தினால் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறோம். ஈரானிய மக்கள் சவுதி அரேபியா மக்களை விட வலுவானவர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். சவுதிஅரேபியாவால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ஒன்று திரண்டுள்ளனர். எங்களுக்கு எதிராக அவர்களால் ஒன்று சாதிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top