இந்திய வரலாற்றில் மக்களின் துக்கத்தை கொண்டாடும் முதல் அரசு இதுதான் – பிருந்தா கரத்

புதுடெல்லி:

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவித்து இருந்தன. அதன்படி நேற்று டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட 6 இடது சாரிகள் கட்சிகள் ஒன்றாக இணைந்து தெருமுனை பிரசாரத்தில் மேற்கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பிருந்தா கரத், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கடுமையாக தாக்கினார்.

அவர் கூறுகையில், “மோடி அரசு உலக வரலாற்றில் 2 மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது லட்சகணக்கான மக்களை வங்கிகள் முன்பாக நீண்ட வரிசையில் காக்க வைத்து அவர்களில் ஏராளமான உயிரை பலிகொண்டது முதல் சாதனை. 2-வதாக கருப்பு பணத்தை தடுத்து நிறுத்தவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று நாட்டு மக்களுக்கும் இந்த உலகிற்கும் சொல்ல முயற்சித்தது. ஆனால் நிஜத்தில் நடந்தது என்ன?… பதுக்கல்காரர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்குத்தான் அது உதவுவதாக அமைந்தது” என்றார்.

நவம்பர் 8-ந்தேதியை கருப்பு பண எதிர்ப்பு தினமாக கொண்டாடும் மத்திய அரசின் செயலை சுட்டிக்காட்டிய அவர், “இந்திய வரலாற்றில் மக்களின் மரணத்தையும், துக்கத்தையும் கொண்டாடும் முதல் அரசு இதுதான்” என்று கடுமையாக தாக்கினார்.

இந்திய கம்யூனிஸ்டு தலைவர் அதுல் அன்ஜன் பேசும்போது, “பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். ஆனாலும் பணமதிப்பு நீக்க விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் தனது தவறை உணர்ந்ததாக தெரியவில்லை. பண மதிப்பு நீக்கம் மக்களுக்கு நரகம்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top