கிரிக்கெட்; டி20 போட்டி மழையால் 8 ஓவராக்கப்பட்டது; தொடரை வென்றது இந்தியா!

இந்தியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. ஸ்டேடியம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

 

ஆனால் மாலையில் இருந்தே திருவனந்தபுரத்தில் பலத்த மழை கொட்டியதால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. எப்படியோ, 2½ மணி நேரம் பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. 12 ஓவர்கள் குறைக்கப்பட்டு 8 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

 

இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல், முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆடம் மில்னே கழற்றி விடப்பட்டு டிம் சவுதி அழைக்கப்பட்டார்.

டாஸ் வென்று கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி பேட் செய்து 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுக்க, இலக்கை விரட்டிய நியூஸிலாந்து 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் 61 ரன்களுக்கு முடங்கியது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

 

இந்திய அணி பேட்டிங்கில் சாண்ட்னர், சவுதி, டிரெண்ட் போல்ட் ஆகியோரிடம் திணறியது. சாண்ட்னர் பந்துகள் நன்றாகத் திரும்பின. விராட் கோலி அருமையாகத் தொடங்கினார். இஷ் சோதி பந்தில் ஒரு பவுண்ட்ரி, ஒரு சிக்ஸ் அடித்தார், ஆனால் 13 ரன்கள் எடுத்து சோதி வீசிய பந்தில் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார்.

 

ஷார்ட் பிட்ச் பந்து கொஞ்சம் வேகமாக வந்தது சிக்ஸ் பந்து என்று அதனை தூக்கினார், ஆனால் ஷாட்டில் பவர் இல்லை, போல்ட் கேட்ச் எடுக்க கோலி 6 பந்துகளில் 13 ரன்களில் வெளியேறினார்.

 

ஷிகர் தவண் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்தை மேலேறி வந்து அடிக்கப் பார்த்தார் பந்து சரியாகச் சிக்கவில்லை, பாயிண்டில் எழும்பியது பின்னால் ஓடிச்சென்று சாண்ட்னர் கேட்ச் எடுத்தார். இது அருமையான கேட்சாக அமைந்தது.

 

இதற்குள் ரோஹித் சர்மா பேட்டிங் முனைக்கு கிராஸ் செய்தார். சவுதியின் லெக் திசை ஆஃப் கட்டரை ரோஹித் புல் ஷாட் ஆடினார் இந்த ஷாட்டும் சரியாகச் சிக்கவில்லை டீப் ஸ்கொயர் லெக்கில் பந்து தரையிறங்கிக் கொண்டிருந்த போது ஓடி வந்த சாண்ட்னர் மிக அருமையாகப் பிடித்தார், கடினமான கேட்ச். அடுத்தடுத்து இரண்டு அபார கேட்ச்கள், இந்திய அணி தொடக்க வீரர்களை சவுதியிடம்… இல்லை…சாண்ட்னரிடம் இழந்தது.

 

பிறகு மணீஷ் பாண்டே (17) புல் ஷாட் ஒன்றை லாங் ஆனில் ஆட, சாண்ட்னர் கேட்சிற்காக ஓடி இருகால்களும் தரையிலிருந்து எழும்ப சமநிலை இழந்தார். ஆனாலும் பந்தை டி கிராண்ட்ஹோமுக்கு த்ரோ செய்தார். அவர் கேட்ச் எடுத்தார், உண்மையில் திகைக்க வைக்கும் ஒரு கேட்ச் உதவியைச் செய்தார் சாண்ட்னர். ஷ்ரேயஸ் 6 பந்துகளில் பவுண்டரி இல்லாமல் 6 ரன்களை எடுத்த நிலையில் இஷ் சோதி பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க நினைத்தார், பந்து லெக் ஸ்பின் ஆனதால் மட்டையில் சரியாகச் சிக்கவில்லை கப்தில் கேட்ச் எடுத்தார்.

 

மணீஷ் பாண்டே 11 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்களை அதிகபட்சமாக எடுக்க, ஹர்திக் பாண்டியா ஒரு சிக்சருடன் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். தோனி 0 நாட் அவுட். இந்தியா 8 ஓவர்களில் 67/5 என்று முடிந்தது.

 

கொலின் மன்ரோ முதல் பந்திலேயே மேலேறி வந்து புவனேஷ்வர் குமாரை மிட்விக்கெட்டில் தூக்கி சிக்ஸர் அடித்து அதிர்ச்சியளித்தார். ஆனால் புவனேஷ்வர் குமார் விரலால் வீசும் பந்துகள் மூலம் வேகத்தைக் குறைத்து அதே ஓவரில் மன்ரோவைக் கட்டுப்படுத்தினார். அதே ஓவரில் கடைசி பந்தில் மார்டின் கப்தில் முன் காலை ஒதுக்கிக்கொண்டு லெக் திசையில் விளாச முயன்று தோல்வியடைந்தார்.

 

மன்ரோவுக்கு பும்ரா அருமையாக வீசினார். பந்தின் தையலைப் பயன்படுத்தி எழுப்பினார் பந்தை ஷார்ட் ஆஃப் லெந்தில் பிட்ச் செய்து மன்ரோவுக்குக் குறுக்காகச் செலுத்தினார், இரண்டு பந்துகள் ரன் வரவில்லை. இதற்காக மேலேறி வந்து ஆடிய மன்ரோ ஷார்ட் பிட்ச் பந்தை கிராஸ் பேட் போட்டார் பந்து மிட் ஆன் மேல் எழும்பியது ரோஹித் சர்மா அற்புதமான ஒரு கேட்சை எடுக்க அபாய மன்ரோ 7 ரன்களில் வீழ்ந்தார்.

 

சாஹல் பிட்சின் சாதகத்தை நன்றாகப் பயன்படுத்தினார், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்தார். 2 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அவர் கொடுக்கவில்லை. குறைந்த இலக்கை வைத்துக் கொண்டு 2 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காதது உண்மையில் அபாரத் திறமைதான்.

 

கொலின் டி கிராண்ட்ஹோம் மற்றொரு அபாய வீரர், இவர் குல்தீப் யாதவ்வை அபாரமாக ஒரு சிக்ஸ் அடித்தார். நியூஸிலாந்து அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 32 ரன்கள் தேவையாக இருந்த போது சாஹல் அருமையாக வீசி முதல் 2 பந்துகளில் கிராண்ஹோம் மட்டையைக் கடந்து செல்லுமாறு வீசினார். அந்த ஓவரில் 3 ரன்களையே கொடுத்தார். இந்த ஓவரில் சாஹல் சிக்ஸ் கொடுத்திருந்தால் ஒருவேளை நியூஸிலாந்துக்கு சாதகமாக ஆட்டம் திரும்பியிருக்க வாய்ப்புண்டு.

 

7வது ஓவரை பும்ரா வீசினார். வேகம் குறைந்த லெக் ஸ்டம்ப் ஆஃப் கட்டரை நிகோல்ஸ் ஃபைன்லெக் திசையில் கேட்ச் கொடுத்தார். பிறகு ஒரு ஃபுல்டாஸை வீச புரூஸ் அதனை ஸ்கொயர் லெக்கில் பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த பந்தை புரூஸ் மேலேறி வருவதைப் பார்த்த பும்ரா பந்தை லெக் திசையில் வீசினார், பந்து தோனி முன்பாக பவுன்ஸ் ஆனாலும் அவர் அதனை அருமையாகத் தடுத்தார் ஒரு ரன் ஓடியதால் ஒரு பை, ஒரு வைடு 2 ரன்கள் வந்தது, 3 ரன்களை தோனி தடுத்தார்.

 

அடுத்த பந்தில் புரூஸ் ரன் அவுட் ஆனார். கடைசி 6 பந்துகளில் நியூஸிலாந்துக்குத் தேவை 19 ரன்கள். பாண்டியா வீச தோனியிடம் பந்து செல்வதற்குள் சாண்ட்னர், கிராண்ட் ஹோம் ஒரு ரன் எடுத்தனர், கிராண்ட் ஹோம் அடுத்த பந்தை விளாச பாண்டியா அருமையாகத் தடுத்தார் ஆனால் சக்தி வாய்ந்த ஷாட் ஆனதால் வலியால் துடித்தார். ரன் இல்லை. அடுத்த பந்தை கிராண்ட் ஹோம் வேகம் குறைந்த பந்து என்று முதலிலேயே பார்த்து விட்டார், மிட்விக்கெட்டில் சிக்ஸ். இன்னொரு பந்து மெதுவான ஆஃப் கட்டர் அதனை சிக்ஸ் அடித்திருக்கலாம் ஆனால் கிராண்ட்ஹோம் ஷாட் டீப் ஸ்கொயர் லெக்கில் 1 ரன் ஆனது. 61/6 என்று முடிந்தது நியூஸிலாந்து.

 

இந்திய அணியில் பும்ரா 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், குல்தீப், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்ற சாஹல் பவுண்டரி கொடுக்காமல் 2 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றார் பும்ரா. விராட் கோலி தலைமையில் இன்னொரு தொடரை வென்றது இந்திய அணி.

 

தோல்வியையடுத்து நியூசிலாந்து அணி 20 ஓவர் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்தது. அதே நேரத்தில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 2–1 என்ற கணக்கில் தனதாக்கி வரலாறு படைத்தது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்தியா வெல்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாக முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், 2–வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி கண்டிருந்தன. இவ்விரு அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரையும் இந்தியா 2–1 என்ற கணக்கிலேயே கைப்பற்றி இருந்தது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top