மழை பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை விடுக்காதா அதிகாரிகள் மீது நடவடிக்கை!

 

மழை வரும் முன்  பாதிப்புக்குள்ளாகும்   பகுதிகளில்  முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத  அதிகாரிகள் மீது அரசு எடுத்த  நடவடிக்கைகள் என்ன ?என்று  சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய கீழ்மட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழுவை உடனடியாக அமைக்கக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையினால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியது. ஆனால் அதன்பிறகும் அரசு அதிகாரிகள் முறையாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை முறையாக அகற்றாததே இதற்கு மூலகாரணம். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் ஆஜராகி, அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால்தான் இந்த துயரம் ஏற்பட்டுள்ளது என்றார். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் குறுக்கிட்டு, சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கையை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

 

அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், ‘‘முதலில் கட்டுப்பாட்டு மையம் 1913 என்ற ஹெல்ப் லைனில் செயல்படுகிறதா? என்பதை இங்கிருந்தே சோதித்துப் பாருங்கள்” என தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். அவர் நீதிமன்றத்தில் இருந்து அந்த எண்ணுக்கு டயல் செய்து, அந்த மையம் முறையாக செயல்படுவதாக தெரிவித்தார்.

 

அப்போது தலைமை நீதிபதி, “கொல்கத்தாவில் மழைநீரை அகற்ற பாதாள மழைநீர் கால்வாய் திட்டம் முறையான செயல்பாட்டில் உள்ளது. காலையில்கூட சாந்தோம் நெடுஞ்சாலையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்படுவதை நானே பார்த்தேன். இந்த நடவடிக்கையை எல்லா இடங்களிலும் தொடர வேண்டும்” என்றார். மேலும் “நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அகற்றுவதில் என்ன சிக்கல் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் மழை பாதிப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு விஜய் நாராயண், “ஒவ்வொரு முறையும் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் மாற்று வீடுகளையும் வாங்கிக்கொண்டு மீண்டும் பழைய இடத்தையே ஆக்கிரமித்து விடுகின்றனர். இதை முழுமையாக அகற்றுவது என்பது பெரிய வேலை” என்றார்.

 

அப்போது வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், ‘‘மாநகராட்சி அலுவலகம்கூட மழைநீரால் சூழ்ந்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற நேரங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர்’’ என்றார்.

 

அப்போது இடையீட்டு மனுதாரான வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், ‘‘ இந்த மழையால் ஏழைகள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழை வெள்ள பாதிப்பை தலைமை நீதிபதி ஹெலிகாப்ட்ரில் சென்று பார்த்தால்தான் உண்மை நிலவரம் தெரியும்’’ என்றார்.

 

அதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசு நிர்வாகத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் நீதிமன்றம் தலையிட முடியும். நீர்நிலைகளில் உள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 3 மாதத்துக்குள் அகற்ற வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top