தமிழக கடல் எல்லை அருகே 13 மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை தொடர் அத்துமீறல்

ராமேசுவரம்:

ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் 500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் தமிழக கடல் எல்லையையொட்டி உள்ள நெடுந்தீவு அருகே மீன் பிடித்தனர். நாகை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்களும் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்கக் கூடாது என கூறி அவர்களை தாக்கி உள்ளனர், படகுகளில் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அபகரித்தனர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்ப முயன்றனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்களை ஒரு படகுடனும், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளது. இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும் கைதுசெய்தும் அத்துமீறி வருகிறது.

மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று பிற்பகலில் சிறையில் அடைக்கப்படுவார்கள். இலங்கை கடற்படை ராணுவத்தின் தொடர் அத்துமீறல்களை இந்திய அரசு கண்டிக்காமல் மௌனம் காத்து வருகிறது. இலங்கை அரசின் தொடர் அத்துமீறல்களால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது.

இதுகுறித்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த எங்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி தொடர்ந்து இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது. இதற்கு எப்போது தான்விடிவு ஏற்படும் என்று தெரியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top