சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது.
அந்த தொடக்கத்தின் போதே வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டது. இதனால் சென்னை மற்றும் 10 கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை அருகே தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை நீடிக்கும் மற்றும் பெரும்பாலான இடங்களில் பலத்த, மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
இந்த மழையானது 40 செ.மீ. அளவுக்கு இருக்கலாம் என்று பல்வேறு சர்வதேச வானிலை மையங்கள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்தாவிட்டாலும் கூட, அடுத்த இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.
இந்த நிலையில் அடுத்து வரும் இரு நாட்களும் பலத்த மழை பெய்தால், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு சேதம் ஏற்படும் அபாயச் சூழல் உருவாகியுள்ளது. எனவே மழை சேதத்தை எதிர்கொள்ள பொதுமக்கள் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வார இறுதிக்குள் சில இடங்களில் 15 முதல் 30 செ.மீ. வரை மழை வரை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரியில் அதிகம் மழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றும், நாளையும் மழை நீடிக்கும் பட்சத்தில் தமிழக கடலோர மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும்.