பலத்த மழையால் – சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு போனது.

வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 452 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. (மொத்த கொள்ளளவு 3645 மி.கன அடி) ஏரிக்கு 719 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்கு 52 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 308 மி.கன அடி தண்ணீர் இருந்தது. நேற்று ஒரே நாளில் பெய்த கன மழையால் ஏரிக்கு 144 மில்லியன் கனஅடி நீர் வந்து உள்ளது.

இன்று காலையும் பலத்த மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புழல் ஏரியில் 487 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி) ஏரிக்கு 1643 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில் 120 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. (மொத்த கொள்ளளவு 881 மி.கனஅடி). ஏரிக்கு 336 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லை.

பூண்டி ஏரியில் 312 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி). ஏரிக்கு 148 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லை.

தொடர் மழையினால் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top