ஆதார் வழக்கு; மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு வழக்கு தொடர முடியாது; சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி,

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

ஆதார் கட்டாயத்தை எதிர்த்து ஏற்கனவே 21 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளது.

மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேற்கு வங்காள அரசு வழக்கு தொடர்ந்தது. இதே போல செல்போன் எண்ணுடன் ஆதார் இனைப்பை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மம்தாபானர்ஜி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்விகளை எழுப்பியது.

மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து மாநில அரசு வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது. கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் மாநில அரசு எப்படி வழக்கு தொடர முடியும் என்றும் கேள்வி எழுப்பியது.

மாநில அரசின் சார்பில் வழக்கு தொடராமல் முதல் மந்திரி என்ற வகையிலோ அல்லது தனி நபர் என்ற வகையிலோ மம்தாபானர்ஜி வழக்கு தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கியது. இதனால் தனது பெயரில் மம்தா வழக்கை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ராகவ் என்பவர் தாக்கல் செய்த மற்றொரு வழக்கில், 12-இலக்க தனி அடையாள எண்ணை மொபைல் போன்களுடன் இணைப்பதன் வழக்கில் மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், உச்ச நீதிமன்றம் தனிமனித உரிமை என்பது ஒரு அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது, ஆனால் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. தனிமனித உரிமையை ஒப்புக் கொள்ளும் போது, ​​உச்சநீதிமன்ற நீதிபதிகள், தரவு பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக சட்டம் மற்றும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த அரசாங்கத்தை கேட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top