தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்கள் எத்தனை?- மதுரை ஐகோர்ட்டு

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா, வெங்குளத்தை சேர்ந்த ராஜூ என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கீழக்கரை அருகே சுமார் 100 கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ தேவைகளுக்காக கீழக்கரை அரசு மருத்துவமனையையே சார்ந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை அரங்கு, ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து, ஏழை மக்களுக்கான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் கடமை. ஆனால் கீழக்கரை, ஏர்வாடி அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்கள் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் 6 டாக்டர்கள், ஒரு ஆய்வக நிபுணர், மருத்துவமனை ஊழியர், பிசியோதெரபிஸ்ட், இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர், பிரசவ அறை உதவியாளர், குடும்ப நல அலுவலர், 2 சமையலர் உள்பட மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் காலியாக உள்ள டாக்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட்ட மற்றும் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top