பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் அற்புதம் அம்மா கோரிக்கை

26 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை குயில்தாசன் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி பேரறிவாளன் பலத்த போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை கே.கே.சி.தங்கவேல் தெருவில் வசித்து வரும் பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

அதன்பிறகு பேரறிவாளனை அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என சுமார் 1,650 பேர் சந்தித்து பேசினர். இவரது தந்தைக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் தாயார் அற்புதம்மாள் பரோல் விடுப்பு மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். பல்வேறு கட்சியினரும் இதே கோரிக்கையை வைத்தனர். அதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் பரோல் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு மாதம் அக்டோபர் 24-ந் தேதி வரை பேரறிவாளனின் பரோலை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பரோல் விடுப்பு நேற்று முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து பேரறிவாளன் நேற்று மதியம் 3.20 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து வெளியே வந்தார்.

பலத்த போலீஸ் காவலுடன் பேரறிவாளன் வேனில் அழைத்து செல்லப்பட்டார். வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பேரறிவாளன் நேற்று மாலை 5 மணிக்கு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேரறிவாளன் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி பரோல் கிடைத்தது. அவரது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் மேலும் ஒரு மாதம் பரோல் விடுப்பை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தந்தை மருத்துவமனையில் இருப்பதால் மேலும் ஒரு மாதம் நவம்பர் 24-ந் தேதி வரை நீடிக்க கோரிக்கை வைத்தோம். ஆனால் பரோல் கிடைக்கவில்லை. இதனால் நேற்று பேரறிவாளன் ஜெயிலுக்கு சென்றார். இதற்கு மேல் பரோல் கேட்காமல் பேரறிவாளனின் விடுதலைக்காக போராடுவேன்.  இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top