ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் பதவியில் நீடிக்க தடை! உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பதவியில் நீடிக்கத் தடை விதிக்கக்கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக திமுக எம்எல்ஏவான திருவண்ணாமலையைச் சேர்ந்த கு.பிச்சாண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

 

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசு கொறடா ராஜேந்திரனின் உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 பேர் முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர்.

 

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு கொடுத்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

ஆனால் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் மனு கொடுத்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது.

 

எனவே அரசு கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தபோதே ஓ.பன்னீர்செல்வமும், மாஃபா பாண்டியராஜனும் தங்களது எம்எல்ஏ என்ற தகுதியை இழந்துவிட்டனர். எனவே தற்போது ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவி வகிப்பது சட்டவிரோதமானது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.

எனவே எந்த தகுதியின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வமும், மாஃபா பாண்டியராஜனும் தற்போது துணை முதல்வராகவும், அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறித்து அவர்கள் இருவரும் தன்னிலை விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் அவர்கள் இருவரும் பதவியில் நீடிக்கவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top