பேரறிவாளனுக்கு விடுதலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், இவ்வழக்கில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தை திரித்து தவறாக பதிவு செய்தது தாம் தான் என்றும் இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 

இந்த அடிப்படையில் இவ்வழக்கின் தீர்ப்பில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.ஐ.க்கு அவர் கடிதம் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் பேரறிவாளன் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, இப்போது சுதந்திரமான மனிதராக வலம் வந்து கொண்டிருப்பார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து முந்தைய காங்கிரஸ் அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இவ்வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்துவது மத்திய அரசுதான். தமிழர்கள் விடுதலையாகி விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த வழக்கின் விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது.

எந்த அடிப்படையிலும் தண்டிக்கப்பட தகுதியற்ற ஒருவரை 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜெயலலிதா இருமுறை அறிவித்த நிலையில், அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை அவர்களை நிபந்தனையற்ற நீண்டகால சிறை விடுப்பில் விடுவிப்பது தான் முறையாக இருக்கும்.

எனினும் பேரறிவாளனின் தாயார் இந்த வாதங்களையெல்லாம் முன்வைக்காமல், மனித நேயத்தின் அடிப்படையில் பேரறிவாளன் தந்தையார் மற்றும் சகோதரியின் மருத்துவம் தொடருவதற்கு வசதியாக சாதாரண சிறை விடுப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும்படி தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரு மாதமாக சிறை விடுப்பில் உள்ள பேரறிவாளன் சிறை விடுப்புக்கான கட்டுப்பாடுகளை சிறிதும் மீறவில்லை. எனவே, அவரது தாயாரின் கோரிக்கையை ஏற்று, பேரறிவாளனின் சிறை விடுப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக ஆட்சியாளர்கள் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top