போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் : வடகொரியா எச்சரிக்கை

சியோல்:

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. வடகொரியா மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வற்புறுத்தியது.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று வடகொரியா மீது புதியதொரு தடையை விதித்தது. அந்த நாட்டின் பெட்ரெல் 8, ஹாவோ பான் 6, டோங் சான் 2, ஜி சுன் ஆகிய 4 வர்த்தக கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.

இதன் மூலம் வடகொரியாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் சீனா மட்டும் அல்ல எந்த நாடும் தனது துறைமுகத்தில் இந்த 4 கப்பல்களையும் நிறுத்த அனுமதிக்க இயலாது.

இதுபோல் ஐ.நா.வின் விதிமுறை மீறியதற்காக குறிப்பிட்ட ஒரு நாட்டின் கப்பல்களை உலக நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஹூயூஜ் கிரிபித்ஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா தற்போது கொரிய தீபகற்ப பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க ராணுவ விமானங்கள் வடகொரியாவை ஒட்டி உள்ள பகுதிகளில் பறந்து சென்று ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.

இது, வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக வடகொரிய வெளியுறவு மந்திரி ரியாங்கோ கூறியதாவது:-

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே வடகொரியாவை கடுமையாக மிரட்டி உள்ளார்.

நாங்கள் வார்த்தைக்கு வார்த்தை அவருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் எங்கள் பதிலடியை போர் மூலம் அவர்களுக்கு காட்டுவோம். அதற்கு தயாராகி விட்டோம்.

டொனால்டு டிரம்ப் மனநிலை பாதித்தவர் போல் செயல்படுகிறார். இதனால் தான் எங்களை மிரட்டுவதற்காக ஒத்திகை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவை விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top