இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி – தொடரை வெல்வது யார்?

ஐதராபாத்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

மூன்று 20 ஓவர் தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.

கவுகாத்தி போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதை சரி செய்தால் தான் நாளைய ஆட்டத்தில் வெல்ல முடியும். இதனால் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து கடுமையாக போராடினால் தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இயலும். ஜேசன் பெரென்டோர்ப் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார். இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 16-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 15 ஆட்டத்தில் இந்தியா 10-ல், ஆஸ்திரேலியா 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது. ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் தொடரையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் தொடரை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top