மத்திய நீர்வள ஆணையக் குழு பெரியாறு அணையில் ஆய்வு: மூவர் குழு கூட்டம் திடீர் ரத்து

 

பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பொருட்டும், பேபி அணையை பலப்படுத்தவும், அணையை கண்காணிக்கவும் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இக்குழுவுக்கு உதவி செய்ய மத்திய துணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக மத்திய நீரவள ஆணைய உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் உள்ளார்.

 

3 மாதங்களுக்குப் பின் நேற்று பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பகல் 11 மணிக்கு குழுத் தலைவர் ராஜேஷ் தமிழக பிரதிநிதிகளுடன் தேக்கடி படகுத் துறை வழியாக படகில் அணைக்கு சென்றனர். கேரள பிரதிநிதிகள் இருவரும் ஜீப்பில் வல்லக்கடவு வனப்பகுதி வழியாக வந்து சேர்ந்தனர்.

 

இதனையடுத்து அணை மதகுகளை பார்வையிட்ட குழுவினர் 3-வது எண் கொண்ட மதகை ஏற்றி இறக்கி பார்த்தனர். பின்னர் பேபி அணையை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மாலையில் குமுளி அலுவலகத்தில் துணைக் குழு தலைவர் தலைமையில் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

 

இதுகுறித்து தமிழக பொதுப் பணித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: வரும் 16-ம் தேதி பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் கிடைத்ததால் பெரியாறு அணையில் நீர் தேக்குவதற்காக நேற்று முன்தினம் விநாடிக்கு 467 கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. ஆனால் 16-ம் தேதி நடைபெற இருந்த ஆய்வுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக நேற்று மத்திய நீர்வள ஆணையத்தின் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top