ராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான வழிவகைகளை காண வேண்டும் என்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.

 

விமானப் படை கமாண்டர்களின் 3 நாள் மாநாடு டெல்லி யில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கிவைத்து ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

 

ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியை சுமையாக பார்க்கக் கூடாது. ராணுவத்தின் அத்தியாவசியமான தேவைகளை கொள்முதல் செய்வதற்கான செலவாக கருத வேண்டும். இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும்.

 

எந்தெந்த தளவாடங்களை நமது நாட்டிலேயே தயாரிப்பது சாத்தியம் என்பது குறித்து இந்திய விமானப்படை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஆயுத தொழிற்சாலை வாரியம் ஆகியவை ஆய்வு செய்ய வேண்டும்.

 

கடந்த 10 ஆண்டுகளில் முடிவுகள் எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக விமானப்படையில் காணப்படும் குறைகள் சரிசெய்யப்படும். படைகள் தேவைப்படும் திறனை அடையும் வகையில் ராணுவ தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

 

மாநாட்டில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா பேசும்போது, ‘‘நமது விமானப்படை முழு திறனோடு விளங்குகிறது. விமானப் படையின் திறனை தொடர்ந்து பராமரிக்கவும் மேம்படுத்தவும் தொடர்ந்த முயற்சியும் அதற்கேற்ற பயிற்சிகளும் தேவைப்படுகிறது’’ என்று கூறினார்.

 

விமானப்படை கமாண்டர்கள் மாநாடு ஆண்டுக்கு இருமுறை நடக்கும். நேற்று தொடங்கிய மாநாட்டில் நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள், எல்லை பகுதிகளில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் ஆராயப்படுகிறது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top