கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 10 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியா:

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ எரிகிறது.

இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவுகிறது.

தற்போது கலிபோர்னியாவில் 8 நகரங்களில் காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காற்று வேகமாக வீசுவதால் தீ பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே 1500 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். அதில் சோனோமா நகரப் பகுதிகளில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நபாவில் 2 பேரும், மெடோ சினோவில் ஒருவரும் அடங்குவர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை. ஒரு பள்ளத்தாக்கில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பகுதி தீயில் எரிந்து கருகியுள்ளது.

இந்த காட்டுத்தீ சம்பவத்தை தொடர்ந்து கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் 14 இடங்களில் எரியும் காட்டுத்தீயால் 70 ஆயிரம் ஏக்கர் எரிந்து சாம்பலானது.ஹெலிகாப்டர்கள் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை கலிபோர்னியா மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top