யு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி

 

இந்தியாவில் 6 நகரங்களில் 17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி(17 வயதுக்கு உட்பட்டோர்) நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ பிரிவில் வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின், ‘இ’ பிரிவில் ஹோண்டுராஸ், ஜப்பான், நியூகலிடோனியா, பிரான்ஸ், ‘எப்’ பிரிவில் ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

 

நேற்று கால்பந்து பிரிவு ஏ போட்டியில் கொலம்பியா அணிக்கு எதிராக இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி தழுவியது.

 

4–வது நாளான நேற்று டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில்  இந்திய அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் கொலம்பியா அணி 49–வது நிமிடத்தில் முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் ஜூயன் பெனாலோசா இந்த கோலை அடித்தார். 82–வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஜீக்சன் சிங் பதில் கோல் திருப்பினார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் கோல் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 

ஆட்டம் டிராவில் முடியலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 83–வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் ஜூயன் பெனாலோசா மீண்டும் ஒரு கோல் அடித்தார். முடிவில் கொலம்பியா அணி 2–1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. 2–வது தோல்வியை சந்தித்த இந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 0–3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டு இருந்தது.

 

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் கோஸ்டாரிகா–கினியா (மாலை 5 மணி), ஸ்பெயின்–நைஜர் (மாலை 5 மணி), ஈரான்–ஜெர்மனி (இரவு 8 மணி), வடகொரியா–பிரேசில் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top