புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினால் சிறைப்பிடிப்பு

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம், மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடித்து வருகின்றனர்.

இன்று அதிகாலையில் அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது.

இதைப்பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தக்கூடுமோ என்ற அச்சத்தில் பலர் தங்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் செல்வமணி என்பவருக்கு சொந்தமான படகை மட்டும் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

மேலும் மீனவர்களின் படகில் ஏறிய கடற்படையினர் அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறித்துக் கொண்டதோடு, அந்த படகில் இருந்த தமிழ்செல்வன் (வயது 55), அப்பாதுரை (52), ரெங்கசாமி (45), ஜீவா (55) ஆகிய 4 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்று மதியம் அவர்கள் 4 பேரும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

அதன்பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும். மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top