பார்முலா1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

கோலாலம்பூர்:

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 15-வது சுற்றான மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் கோலாலம்பூரில் உள்ள செபாங் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 310.408 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 19 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

காரில் பேட்டரி கோளாறு ஏற்பட்டதால் முன்னாள் சாம்பியனான பின்லாந்தின் கிமி ரெய்க்னோனின் பந்தயத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதில் 3-வது வரிசையில் இருந்து புறப்பட்ட நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 30 நிமிடங்கள் 01.290 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். மேலும் அதற்கான 25 புள்ளிகளையும் தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். நேற்று அவரது 20-வது பிறந்தநாளாகும்.

அவரை விட 12.7 வினாடி மட்டுமே பின்தங்கிய முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 2-வதாக வந்து 18 புள்ளிகளையும், ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிக்கார்டோ 3-வதாக வந்து 15 புள்ளிகளும் பெற்றனர். 4 முறை சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், பெராரி அணியை சார்ந்த இவர் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதுவரை நடந்துள்ள 15 சுற்றுகள் முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 281 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 247 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 222 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

அடுத்த சுற்று போட்டி ஜப்பானில் வருகிற 8-ம் தேதி நடக்கிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top