கேரள அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூலி தொழிலாளியின் மனைவி கண்ணீர் பேட்டி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலித் தொழிலாளிக்கு கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இங்கு ராஜேந்திரனின் மனைவி கல்பனா (வயது 38) கண்ணீர் மல்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது கணவர் மலப்புரம் குட்டிபுரம் பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் உங்களது கணவரை வெட்டி விட்டனர் என்று எனக்கு போன் வந்தது. திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் எனது கணவரை சேர்த்தனர்.

அங்கு எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சையளிக்க வசதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இப்போது சேர்த்துள்ளோம்.

இங்கு டாக்டர்கள், எனது கணவரின் காலில் ரத்தம் அதிகமாக போய் உள்ளது. எனவே காலை எடுக்க வேண்டியது இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்திலேயே கேரள அரசு டாக்டர்கள், எனது கணவருக்கு உரிய சிகிச்சை அளித்து இருந்தால் இப்போது காலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. எனது கணவர் தமிழன் என்பதால் சிகிச்சை அளிக்க மறுத்து அலைக்கழித்துள்ளனர். எனவே அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top