ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா

நாக்பூர்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சீராக ரன்களைக் குவித்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக அக்‌ஷர் படேல் 3 விக்கெட்களையும், ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 124 ரன்கள் எடுத்த போது ரஹானே அவுட் ஆனார். அவர் 74 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார்.

அடுத்ததாக, களத்தில் இருந்த ரோகித் ஷர்மாவுடன் கோலி கை கோர்த்தார். ரோகித் ஷர்மா அபாரமாக விளையாடி 125 ரன்களைக் குவித்தார். 109 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் ஷர்மா 5 சிக்சர்கள், 11 பவுண்டரிகளை விளாசி 125 ரன்களை சேர்த்தார். இந்திய அணி 223 ரன்களை எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா அவுட் ஆனார்.

களத்தில் இருந்த விராட் கோலியும் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 39.4 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் ஜாதவ், மணீஷ் பாண்டே இருந்தனர். 42.5வது ஓவரில் வெற்றி இலக்கான 243 ரன்களை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்த தொடரை இந்தியா வென்றது.

இதன் மூலம் ஒருநாள் போட்டி தொடரில் முதல்தர வரிசையை இந்தியா தக்கவைத்துள்ளது. ஆட்ட நாயகனாக ரோகித் ஷர்மாவும், தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வுசெய்யப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top