தமிழக வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த கேரள மருத்துவமனைகள்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொல்லத்தில் சாலை விபத்தில் சிக்கினார். அவரை மீட்ட போக்குவரத்து போலீசார் கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் தமிழர் என்பதால் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தன. இதனால் அவர் 500 கி.மீட்டர் தூரம் அலைக்கழிக்கப்பட்டார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் அவர் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளாவுக்கு நடந்த அவமானம் என்று அரசியல் கட்சினர் விமர்சனம் செய்தனர். இந்த சம்பவம் கேரள சட்டசபையில் எதிரொலித்தது. எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதல்-மந்திரி பினராய் விஜயன் இந்த சம்பவம் கேரளாவில் நடந்த அவமானமாக கருதுவதாகவும், உயிரிழந்த முருகனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். அதன்பின்னர் முருகனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினார்.

இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் கேரளாவில் மீண்டும் நேற்று வாலிபர் ஒருவருக்கு தமிழர் என்பதால் சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 36). இவரது நண்பர்கள் கோடீஸ்வரன் (33), சங்கர் ஆகியோர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குத்திப்புரம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜேந்திரனுக்கும், கோடீஸ்வரனுக்கும் இடையே குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோடீஸ்வரன் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து ராஜேந்திரனின் காலை வெட்டினார். இதில் ராஜேந்திரனின் பாதப்பகுதி முற்றிலும் வெட்டுப்பட்டு தொங்கியது. படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் மயங்கினார். இதைப்பார்த்த கோடீஸ்வரன் தப்பி ஓடிவிட்டார். மற்றொரு நண்பரான சங்கர் ஓடி வந்து பார்த்தார். அப்போது படுகாயங்களுடன் கிடந்த நண்பரை மீட்டு குத்திப்புரம் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கால் பாதம் தொங்கிய நிலையில் உள்ளதால் இங்கு அதற்கான சிகிச்சை இல்லை. எனவே திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் திருச்சூர் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சூர் மருத்துவமனையில் ராஜேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வெட்டுக்காயம் ஆழமாக உள்ளதால் இதற்கான சிகிச்சை இங்கு இல்லை என்று சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர்.

இதனையடுத்து கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். கோழிக்கோடு அரசு மருத்துவமணையில் ராஜேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இதற்கான சிகிச்சை முறைகள் இங்கு இல்லை. வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று பொறுப்பை தட்டிக்கழித்தனர்.

கால் துண்டானதில் ராஜேந்திரனுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி உடல் நிலை மோசமானது. இதனையடுத்து அவரது சொந்த ஊரான அரியலூருக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.

அதன்படி நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அதே ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் புறப்பட்டனர். ஆம்புலன்ஸ் பாலக்காடு அருகே வந்தபோது ராஜேந்திரனின் உடல் நிலை மோசம் அடைந்தது.

இதனையடுத்து அரியலூர் கொண்டு சென்றால் எந்த நேரத்திலும் இவர் உயிரிழக்க நேரிடும் என்று அறிந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு எடுத்தனர். அதன்படி இன்று அதிகாலை கோவை அரசு மருத்துவமனைக்கு ராஜேந்திரனை கொண்டு வந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் ராஜேந்திரனை சிகிச்சைக்காக அனுமதித்த டாக்டர்கள் அவருக்கு தீவிர அளித்து வருகிறார்கள்.

வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் குத்திப்புரம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சுமார் 370 கி.மீட்டர் தூரம் அலைந்தனர். ஆனால் கேரள மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர்.

தமிழர் என்பதால் சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் மீண்டும் கேரளாவுக்கு ஏற்பட்ட அவமானம் என்று அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top