நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய பொருளாதார நிலை குறித்து பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்பிரமணிய சுவாமி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பெரும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய பொருளாதாரத்தை மீட்க முடியுமா? என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

அவர்களது விமர்சனங்களுக்கு நிதி மந்திரியோ, பிரதமர் மோடியோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்தியாவின் பொருளாதார உண்மை நிலை என்ன என்பதை பற்றி பிரதமர், நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும். மத்திய அரசு அறிவித்த ‘பண மதிப்பு அழிப்பு’ நடவடிக்கை ஒரு பொருளாதார அவசர நிலை என்று முதலில் சுட்டிக்காட்டியது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

அந்த நடவடிக்கையை எதிர்த்து மிகப்பெரிய மாநாட்டையும் நடத்தினோம். அந்த மாநாட்டுத் தீர்மானத்தில் எச்சரித்தது போலவே இந்திய பொருளாதாரம் இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமரே பொறுப்பேற்கவேண்டும். தான் எடுத்த தவறான பொருளாதார நடவடிக்கைக்காக பொதுமக்களிடம் பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்.

நாடு பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிறது என்பதை அரசு உடனடியாக அறிவிக்கவேண்டும். அதன் அடிப்படையில் அவசரமான பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கு, இன்றைய பொருளாதார நிலை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பிரதமர் வெளிப்படையாக விளக்கமளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top