ஐ.நா.வில் வைகோவை தாக்க முயற்சி: இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுகவினர் கைது

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி மேற்கொண்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்தை மதிமுகவினர் நேற்று முற்றுகையிட முயன்றனர். இதுதொடர்பாக 156 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது கூட்டம் ஜெனீவாவில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரு தினங்களுக்கு முன்பு பங்கேற்றுப் பேசினார். அப்போது, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதற்கு ஐ.நா. சபை முன்வர வேண்டும் என்று கூறினார்.

வைகோவின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த சிங்களர்கள் சிலர் அவரைத் தாக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மதிமுகவினர் நேற்று முற்றுகையிட முயன்றனர்.

மல்லை சத்யா செய்தியாளர்களிடம் கூறும்போது:

‘‘ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிங்களர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்தனர். இதைக் கண்டு வைகோ அச்சப்படப் போவதில்லை. அவர் தனது 52 வருட பொதுவாழ்வில் இதுபோன்று ஏராளமான மிரட்டல்களைச் சந்தித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டிக்க வேண்டும். மேலும், வைகோவுக்கு மிரட்டல் விடுத்த சிங்களப் பெண்ணைக் கைது செய்ய வேண்டும்’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 156 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top