ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அதிகரித்து இருப்பதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் அருவிகளிலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர். வேலைநிறுத்தம் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கப்படவில்லை. இதனால் பரிசல்களில் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இது நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரத்து 597 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 80.19 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 80.74 அடியாக உயர்ந்துள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top