3-வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் சேர்த்தது. ஆரோன் பிஞ்ச் 124 ரன்னும், ஸ்மித் 63 ரன்னும், வார்னர் 42 ரன்னும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி. இந்தியாவின் ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ரோகித் சர்மா 42 பந்திலும், ரகானே 50 பந்திலும் அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 21.4 ஓவரில் 139 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 62 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். சிறிது நேரத்தில் ரகானே 76 பந்தில் 9 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டோன் அகர் பந்துகளை பாண்டியா சிக்சருக்கு தூக்கினார்.

விராட் கோலி 28 ரன்னிலும், கேதர் ஜாதவ் 2 ரன்னிலும் வெளியேறினார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா உடன் மணீஷ் பாண்டே இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா, 72 பந்தில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதில் 5 பவுண்டரி, 4 சிக்சரும் அடங்கும்.

இந்திய அணிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் டோனி களம் இறங்கினார். இந்தியா 47.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 36 ரன்னுடனும், டோனி 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top