தமிழக அரசு நீட் தேர்வுக்கு வல்லுநர் குழு அமைக்க தாமதம் ஏன்?: உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை:

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய அரசின் நீட் தெரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் போராடினார்கள். மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் மற்றும் போராட்டங்கள் நடந்தன, மத்திய அரசின் மீது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் விரைவில் அமைக்கப்படும். மேலும், நீட் தேர்வுக்கான வல்லுநர் குழுவும் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசு இதுவரை நீட் தேர்வு தொடர்பான வல்லுநர் குழுவை அமைக்கவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான வல்லுநர் குழுவை அமைக்காத தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி என்.கிருபாகரன் அரசு மற்றும் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவதாக கூறி மக்களை ஏமாற்றி இருக்கிறீர்கள். நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்க அரசுக்கு ஒரு மணி நேரம் போதாதா? நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற்றுத் தரும்வரை அமைச்சர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி தர வேண்டாம். நீங்கள் செய்துள்ள கால தாமதத்தால் ஒரு உயிரை இழந்திருக்கிறோம். நீட் வல்லுநர் குழுவை அமைப்பதில் கால தாமதம் ஏன்? நீட் தேர்வு பயிற்சி மையம் அமைப்பது தொடர்பாக அக்டோபர் 6-ம் தேதி பதில் தரவேண்டும்‘ என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால், போராட்டத்தில் மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையானது தமிழகத்திற்கு மத்திய அரசின் நீட் தேர்வில் இருந்து முழு விளக்கு அளிக்க வேண்டும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்தனர். நுங்கம்பாக்கம் அரசு பள்ளி மாணவிகளும் இந்த கோரிக்கையையே முன்வைத்து போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top