நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வைகோ வாதம்

 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் வைகோ இன்று, நீதியரசர் நம்பியார் அவர்கள் அமர்வில் ஆஜரானார்.

நீதியரசர் தனது அமர்வில், தீர்ப்பாய உறுப்பினராக ராவ் ஒருவர்தான் இருக்கின்றார். அவர் தீர்ப்பு ஆயத்தின் முதல் அமர்வில் பங்கேற்கின்றார். அவரும் சேர்ந்து அமர்ந்தால்தான் விசாரிக்க இயலும் என்றார். அதுமட்டுமல்ல, ஓ.என்.ஜி.சி நிறுவனமும், தமிழ்நாடு அரசும் தங்கள் தரப்பு பிரமாண வாக்குமூலங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

உடனே வைகோ பின்வருமாறு கூறினார்.

“2017 பிப்ரவ்ரி மாதம் முதல் வாரத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனமும், கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் லேபரட்ரி நிறுவனமும் திடீரென்று எந்திரங்களை ஏராளமாகக் கொண்டு வந்து குவித்து எரிவாயு எடுக்கும் ஆயத்த வேலைகளைத் தொடங்கியவுடன், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அதற்கு அறவழியில் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தைத் தொடங்கினர். கடந்த 7 மாத காலமாக அங்கு போராட்டம் நடக்கின்றது. அதிலும் 5 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்து விட்டது. அறவழியில்தான்.

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் லைசன்சை மத்திய அரசிடம் பெற்றுள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி குடும்பத்தினர் நடத்தும் ஜெம் லேபரட்ரிஸ் நிறுவனம், பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று தனது பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில் மீத்தேன் எரிவாயு, ஷேல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து எரிவாயுகளைக் கொண்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க தனக்கு மத்திய சர்க்கார் லைசன்சு கொடுத்துவிட்டது என்றும், எனவே இதை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

எவ்வளவு நெஞ்சழுத்தமும், ஆணவமும் இருந்தால் ஜெம் லேபரட்ரி இதைச் சொல்லத் துணியும்?

தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் நெடுவாசலில் மீத்தேன் எரிவாயுவை எடுக்க மத்திய அரசு ஜெம் லேபரட்ரிக்கு லைசன்ஸ் கொடுத்துவிட்டது. நிலைமை தற்போது மோசமாகி வருகின்றது.”

இவ்வாறு வைகோ தமது வாதங்களை எடுத்து உரைத்தார்.

நீதியரசர் நம்பியார் அவர்கள், இரண்டு வார காலத்திற்குள் ஓ.என்.ஜி.சி நிறுவனமும், தமிழ்நாடு அரசும், தங்கள் தரப்பு பிரமாண வாக்குமூலங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியதோடு, வழக்கு விசாரணையை அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, பின்வருமாறு சொன்னார்.

பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நீதியரசர் ஜோதிமணி பங்கேற்கும் முதல் அமர்வில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து நான் வழக்குத் தொடுத்தேன்.

மீத்தேன் எரிவாயு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று நீதியரசர் ஜோதிமணி அவர்கள் கூறிய யோசனையைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அப்பொழுது முதலமைச்சராக இருந்த சகோதரி ஜெயலலிதா அவர்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தலைமையில் அமைத்த நிபுணர் குழு, ‘மீத்தேன் எரிவாயு திட்டம் தமிழ்நாட்டுக்கே கேடானது; தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளை விவசாயத்தை நாசமாக்கிவிடும்’ என்று கொடுத்த அறிக்கை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டுக்குள் எந்த சூழ்நிலையிலும் மீத்தேன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கhது என்றும் அன்றைய முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆனால் மத்திய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,

‘மீத்தேன் திட்டத்துக்கு ஒப்பந்தம் போட்ட தி கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேசன் ஒப்பந்தம்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது; அதுவும், அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் அந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தால்; ஆனால், மீத்தேன் திட்டத்தை தமிழ்நாட்டில் மத்திய அரசு நிச்சயமாகச் செயல்படுத்தும்’ என்று கூறிவிட்டார்.

பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்கு நியமிக்க வேண்டிய நிபுணர் குழு உறுப்பினரை வேண்டுமென்றே மத்திய அரசு நியமிக்காமல் இருக்கின்றது. எனக்குக் கிடைத்துள்ள தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது. இந்தியா முழுவதும் உள்ள பசுமைத் தீர்ப்பாயங்களை நிரந்தரமாக மூடிவிட மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மக்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், நல்ல சேவை செய்து வருகின்ற பசுமைத் தீர்ப்பாயங்களை எல்லாம் மூடிவிட்டு, தங்கள் விருப்பம்போல் கார்பரேட் கம்பென்கள் மூலம் நாட்டின் செல்வங்களை கொள்ளை அடிக்கவும், சுற்றுச்சூழலை நாசமாக்கவும் மறைமுகமாக பாதை வகுத்துத் தருகின்றது என்று குற்றம் சாட்டுகின்றேன்.”

வைகோ அவர்களுடன், வழக்கறிஞர்கள் கோ.நன்மாறன், இரா.செந்தில்செல்வன், என்.சுப்பிரமணி, பாஸ்கர், மு.வினோத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top