நீட் தேர்வினால் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு நடை பெற்றது.

இதனால் அரசு பள்ளிகளில் படித்த மாணவ – மாணவிகளுக்கும், கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் போனது.

நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களும், சி.பி.எஸ்.. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும் அதிக இடங்களை பிடித்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2503 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 4,700-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்றனர். ஒரு பங்கு இடங்கள் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய பாட திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு கிடைத்தது.

பிளஸ்-2 மதிப் பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடை பெறும் என்று காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மருத்துவபடிப்புக்கான கலந்தாய்வை நீட் தேர்வு அடிப்படையிலேயே நடத்த வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டது. ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு தற்போது வகுப்புகள் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 2 மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டுகளில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெறும். ஆண்டு தோறும் அரசு பள்ளிகளில் படித்த 30 முதல் 35 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்கும்.

ஆனால் இந்த வருடம் ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் அரசு பள்ளியில் படித்த 2 மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது.

மேலும் அரசு பள்ளியில் படித்த 3 மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top