கல்வியைத் தொடர பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதி கோரி மாணவி வளர்மதி மனு

 

குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி கல்வியைத் தொடர சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதி கோரியுள்ளார்.

 

ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும்  மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக கூறி பெரியார் பல்கலைக்கழக இதழியல் 2-ம் ஆண்டு படித்துவரும்  சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த மாணவி வளர்மதியை  கன்னங்குறிச்சி போலீஸார் கடந்த ஜூலை 12-ம் தேதி கைது செய்தனர். மேலும் அவர் மீதுள்ள பல்வேறு வழக்கு அடிப்படையில் குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைதை பதிவு  செய்தனர்.

 

இதையடுத்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து வளர்மதியை இடைநீக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இந்நிலையில், வளர்மதியின் தந்தை மாதையன் தொடர்ந்த வழக்கில் வளர்மதி மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வளர்மதி, துண்டுப் பிரசுரம் விநியோகித்தது தொடர்பான வழக்கில் ஜாமீன் நிபந்தனையின்படி சேலம் 4-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

 

பின்னர் அவர் கூறும்போது, “மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடுவேன். நக்சலைட்களிடம் நான் ஆயுதப் பயிற்சி எதுவும் பெறவில்லை. போராட்டம்தான் எனது ஆயுதம். அடக்குமுறையால் என் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றார்.

இதனிடையே, சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்துக்கு சென்ற வளர்மதி, பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணனை அணுகி, குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வழங்கி தம்மை மீண்டும் கல்வி பயில அனுமதிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top