அமெரிக்காவின் புளோரிடாவை தாக்கிய ‘இர்மா’ புயல் 3 பேர் பலி 60 லட்சம் மக்கள் வெளியேற்றம்

அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் 2 நாட்களுக்கு முன்பு கியூபா நாட்டின் ஹவானா நகரை தாக்கியது. அங்கு இந்த புயலுக்கு 24 பேர் பலியாயினர். பின்னர் இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்தது. 3

மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் நகர்ந்த இந்த புயல் 4-ம் நிலைப் புயலாக மாறி அமெரிக்காவின் தீவு நகரான கீ வெஸ்ட்டை தாக்கியது. கனத்த மழை கொட்டியதால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதி கடற்கரையோர நகரங்களான நேப்பிள்ஸ், மைமர்ஸ், டம்பா ஆகியவற்றை இர்மா தாக்கும் என்பதால் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அமெரிக்க வரலாற்றில் ஒரே நேரத்தில் புயலுக்காக 60 லட்சம் பேர் இடம் பெயர்ந்தது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.நிவாரண முகாம்களில் சுமார் 2 லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். சுமார் 2 லட்சம் வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இந்த மாநிலத்தில் அமெரிக்க இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இர்மா புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என மக்களை எச்சரித்துள்ளார்.

இர்மா புயலுக்கு புளோரிடா மாகாணத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் ஹார்டி மாவட்டத்தின் துணை ஷெரீப்பும் ஒருவர் ஆவார். இந்த புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

புளோரிடா மாநிலத்தை தாக்கிக் கொண்டிருக்கும் ‘இர்மாவின்’ புயல் படிப்படியாக நகர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் அடுத்த வாரம் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top