பெங்களுர் உயர்நீதிமன்ற தடையை மீறி அதிமுக பொதுக்குழு; சசிகலா நியமனம் செல்லாது;தீர்மானம்

 

 

பெங்களுர் உயர்நீதிமன்ற தடையை மீறி அதிமுக பொதுக்குழு இன்று கூடியது .

 

அதில் முக்கிய தீர்மானமாக இரட்டை இலையை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இரு அணிகள் இணைந்ததற்கு பாராட்டு தெரிவித்து ஒரே கட்சியாக இணைந்தது குறித்து பாராட்டியும் வாழ்த்தியும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

 

முதல் தீர்மானமாக இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். பின்னர் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வந்த 2 அணிகளும் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி இணைந்தன.

 

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அப்போது அறிவித்தனர். இதையடுத்து, துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார். இதற்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 21 எம்எல்ஏக்கள், முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்.

 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அதிமுக நிர்வாகிகள் கூடி, பொதுக்குழுவை விரைவில் கூட்ட முடிவெடுத்தனர். செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

 

அதன்படி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று (செப்.12) நடைபெற்று வருகிறது.

 

தீர்மானங்கள் விவரம்:

இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்.

 

கட்சியில் இனி பொதுச் செயலாளர் பதவியே கிடையாது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர் எனத் தீர்மானம்.

 

தினகரன் நியமனங்கள், அறிவிப்புகள் செல்லாது.

 

பொதுச் செயலாளர் சசிகலாவின் நியமனம் ரத்து.

 

கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க, நீக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம்.

 

கட்சி விதி எண் 19-ல் திருத்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

 

அதிமுக பொதுச் செயலாளருக்கு உள்ள அதிகாரங்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம்.

 

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் பொறுப்புகளில் தொடர்வார்கள்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top