உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை விரும்பவில்லை: பா.ஜனதா

தேசிய கட்சியான பா.ஜனதாவுக்கு தமிழகத்தில் வலிமையான அடித்தளம் இல்லை. எனவே கட்சியை வலுப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி கட்சியை வளர்க்கும் முயற்சிகளில் பா.ஜனதாவினர் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவும், பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எடப்பாடி, ஓ.பி.எஸ். தனி அணிகளாக இருந்தபோதும் சரி, ஒன்றாக இணைந்தபோதும் சரி பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.

எனவே வரும் காலத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதில் என்ன தவறு?” என்று பகிரங்கமாகவே கேள்வி எழுப்பினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

அதே நேரத்தில் தற்போதைய அ.தி.மு.க. அரசு மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஊழலற்ற ஆட்சி என்ற கோ‌ஷத்துடன்தான் மோடி மத்தியில் ஆட்சியை பிடித்தார். இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது பா.ஜனதாவிற்கு பின்னடவைதான் ஏற்படுத்தும் என்ற கருத்தும் பலமாக இருக்கிறது.

கட்சியின் துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசும்போது, “கூட்டணி விசயத்தில் இப்போது எதையும் சொல்ல முடியாது. எங்களை பொறுத்தவரை கழகங்கள் இல்லாத தமிழ் நாடு என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் தி.மு.க.வை மட்டுமல்ல, அ.தி.மு.க.வையும் எதிர்க்கத் தான் செய்கிறோம். எங்கள் இந்த நிலைப்பாட்டை திருச்சி கூட்டத்திலேயே தெளிவுபடுத்தினோம்” என்றார்.

மாநில தலைவர் டாக்டர் தமிழிசை கூறும்போது, “கட்சியை வலுப்படுத்தி தனித்து தேர்தலை சந்திக்கும் வகையில் தயாராகி வருகிறோம். இதற்காக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.

எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை பா.ஜனதா மேற்கொள்ளாது என்று தெரிகிறது. இருந்தும் அ.தி.மு.க. பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன வருகின்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top