பெரும்பான்மை இழந்துவிட்ட எடப்பாடி அரசை தாங்கும் மோடி அரசு – தி. வேல்முருகன்

எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்டது என்றும் ஆளுநரை கொண்டு அரசை தாங்கி பிடிப்பதாகவும் தி. வேல்முருகன் கூறியுள்ளார்.

20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பழனிச்சாமிக்கான ஆதரவை திரும்பப்பெற்றுக் கொண்டதாக ஆளுநரிடம் எழுதிக் கொடுத்துள்ளனர். இதனால் சுமார் 110 எம்எல்ஏக்களே பழனிச்சாமியிடம் எஞ்சியுள்ளனர். பெரும்பான்மைக்கு 117 எம்எல்ஏக்கள் தேவை. எனவே பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. இதனை அந்த 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மட்டுமின்றி சட்டமன்ற எதிர்க்கட்சி நிர்வாகிகளும் ஆளுநரை நேரில் சந்தித்து சொல்லிவிட்டனர். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பழனிச்சாமியைக் கோராமல் தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து வருகிறார் ஆளுநர். இதற்கு மத்திய மோடி அரசுதான் காரணம் என்பது வெளிப்படை. சட்டமன்றப் பெரும்பான்மையைத்தான் அரசு என்கிறது அரசியல் சாசனம்; பெரும்பான்மை இல்லை என்றால் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கச் சொல்கிறது. இதைத்தான் உறுதி செய்கின்றன, ஒட்டுமொத்த தமிழகத்தின் தன்னெழுச்சியான போராட்டங்கள். விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், மீனவர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தாய்மார்களின் போராட்டங்கள். இந்தப் போராட்டங்கள், பழனிச்சாமியை மட்டுமே எதிர்க்கவில்லை; சட்டத்தையும் ஜனநாயகத்தையும் புறந்தள்ளி, பழனிச்சாமியின் அதிமுக அரசை பாஜக அரசாகவே மாற்றிக் கொண்டுவிட்ட மோடிச்சாமியையும் சேர்த்தே எதிர்க்கின்றன.. ஆனால் மக்களே அதிகாரிகள் என்ற மாறா உண்மையை சகிக்க முடியாமல், தானே சர்வத்திற்கும் அதிகாரி என்று, தான்தோன்றித்தனமாக, ஆளுநரைக் கொண்டு எடப்பாடி அரசைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் மோடி. இப்படி அரசியல் சாசனத்திற்குப் புறம்பாக, பெரும்பான்மை இல்லாததை, அரசு என்பதாக ஆளுநர் மூலம் வலுக்கட்டாயமாக தமிழக மக்களின் தலையில் கட்ட வேண்டிய அவசியம் என்ன? குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட மாணவி வளர்மதி இப்போதுதான் சிறையிலிருந்து மீண்டிருக்கிறார். நீட் தேர்வை எதிர்த்த மாணவி அனிதாவின் உயிரையே பறித்ததோடு; அந்த மரணத்தையும், அதற்காக வெகுண்டெழுந்து போராடும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் கிருஷ்ணசாமிகளும் ஜி.எஸ்.மணிகளும் விஷத்தைக் கக்கச் செய்யப்பட்டுள்ளனர். சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.70,000த்தில் இருந்து ரூ.85,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.20,000 குறைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.4,500, மோடி பிரதமரானதிலிருந்தே நிறுத்தப்பட்டுவிட்டது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி எதிலும் எந்த வேலையும் நடைபெறாமல் செய்யப்பட்டுள்ளது. கொசுமருந்து, கொசுப்புகைகூட அடித்துவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்திக் கொண்டவர்களே அமைச்சரவைச் சகாக்களாக இருக்கும் ஊழல் எடப்பாடி அரசை சட்டவிரோதமாகத் தாங்கிப் பிடிப்பதும் ஊழல்தானே தவிர வேறென்ன? இந்தியாவிலேயே ஊழலைத் தண்டித்து வரலாறு படைத்தது தமிழ்நாடுதான் என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே எச்சரிக்கிறோம்! மாநில ஊழலை மட்டுமல்ல; மத்திய ஊழலையும்தான் தமிழ்நாடு தண்டிக்கும் என்றும் தி. வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top