ஜாக்டோ-ஜியோ 2-வது நாளாக போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? இன்று அறிவிப்பு

 

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த நடவடிக்கை குறித்து சென்னையில் இன்று நடக்கும் ஜாக்டோ – ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அதன் புதிய மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

 

இதன் தொடர் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் ஜாக்டோ-ஜியோ புதிய ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர்.

 

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது: எங்களின் முதல் கட்டப் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. முதல் நாளன்று நடந்த போராட்டத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 2 லட்சம் பேர் கைதுசெய்யப்பட்டனர்.

 

வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அதுதொடர்பாக நீதி்மன்றத்திடமிருந்தோ, அரசிடமிருந்தோ எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை.

 

நாங்கள் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என அறிவிக்கவில்லை. 7-ம் தேதி தாலுகா அளவிலும், 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெறும் என அறிவித்திருந்தோம். அதன்படி அந்த போராட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. 2-வது நாளில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

 

இனி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் உயர்நீதிமன்ற உத்தரவு குறித்தும் ஆலோசிக்க ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை (இன்று) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

 

இப்போதுகூட காலம் கடந்துவிடவில்லை. புதிய பென்ஷன் திட்டம் ரத்துசெய்யப்படும் என்று முதல்வர் ஓர் உறுதிமொழி தந்தால்போதும் உடனடியாக எங்கள் போராட்டத்தை கைவிட்டுவிடுகிறோம்.

 

அதேபோல், புதிய ஊதியம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்ததும் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் கூறுகிறார். அதுவரையில் 20 சதவீத இடைக்கால நிவாரணம் தாருங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

 

இதனால் அரசுக்குத்தான் வசதி. புதிய ஊதியம் அமல்படுத்தப்படும்போது இந்த தொகையை கழித்துக்கொள்ளலாம்.

இவ்வாறு கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top