55 குழந்தைகள் பலி-நாசிக் அரசு மருத்துவமனை

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை உள்ளது. கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த சுமார் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதேபோல், அங்குள்ள பரூக்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 20-ந்தேதி முதல் ஆகஸ்டு 21-ந்தேதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் 49 குழந்தைகள் உயிரிழந்தது வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சோகச்சுவடு மறைவதற்குள் மகாராஷ்டிரா மாநில நாசிக்கில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் புதிதாக பிறந்த 55 குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரையில் அந்த ஆஸ்பத்திரியில் 187 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.

இது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் சுரேஷ் ஜகதாலே அளித்த பேட்டியில், “இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, குணம் அடைவதற்கான வாய்ப்பு மிகக்குறைவுதான் என்ற நிலையில் கொண்டு வரப்பட்டவர்கள். மேலும் உரிய காலத்துக்கு முன்பே குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளும், நுரையீரல் பலவீனமான குழந்தைகளும் இறந்துள்ளனர்” என கூறினார்.

மேலும், “நாசிக் அரசு மருத்துவமனையில் 18 இன்குபேட்டர்கள் உள்ளன. பற்றாக்குறை காரணமாக ஒரு இன்குபேட்டரில் சில நேரங்களில் 2,3 குழந்தைகளைக்கூட வைக்க வேண்டிய நிலை உள்ளது” என குறிப்பிட்டார்.

மாநில சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த், “குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என்பது உண்மை” என்று கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top