நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு வேண்டும்; 7-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

 

நீட்’ தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதா மனவேதனையில் கடந்த 1-ந்தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நடத்தும் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கல்லூரிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.அதேபோல சென்னை அரசு சட்டக் கல்லூரிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் கல்லூரிகளுக்கு வந்துவிட்டு, அங்கே ஒட்டப்பட்டிருந்த அறிவிப்புகளைப் பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

 

செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி முதல்வர் அறையில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள், அறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதேபோல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 300 மாணவர்களும், சென்னை பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், சென்னை அரசு கவின் கலைக்கல்லூரில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

 

மயிலாப்பூர் விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சென்னை மாநிலக் கல்லூரிக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மெரினா சாலையில் மறியல் செய்ய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

 

இதனிடையே மாநிலக் கல்லூரி வளாகத்திலும், மெரினா சாலையிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக்கும் கடற்கரைக்கும் செல்ல மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவர்களிடையே வலுக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைக்க அரசுக் கல்லூரிகளுக்கு திடீர் விடுமுறை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே அனைத்துக்கல்லூரி மாணவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவி ஒருவர் தனது முகத்தில் அனிதாவை போன்று முகமூடி அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். அவரது கழுத்தில் தூக்கு கயிறு போன்று மாட்டப்பட்டிருந்தது.

அந்த கயிற்றின் ஒரு பகுதியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை போன்று முகமூடி அணிந்திருந்த மாணவர் ஒருவரும், மற்றொரு பகுதியை பிரதமர் நரேந்திரமோடியை போன்று முகமூடி அணிந்திருந்த மாணவர் ஒருவரும் பிடித்துக்கொண்டிருந்தபடி நூதன போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர்.

 

அனிதா சாவுக்கு நீதி கேட்டும், உலக வர்த்தக மையத்தில் இருந்து இந்தியா வெளியேற கோரியும் கல்வி மீட்பு குழு என்ற அமைப்பின் சார்பில் பெண்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் சென்னை கிண்டியில் உள்ள இந்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை மையத்துக்கு பூட்டு போட முயன்றனர்.

இதனால் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வேண்டும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்து உள்ளனர். நேற்று 7-வது நாளாக பல்வேறு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top