‘நீட்’ தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராடிய மதுரை மாணவர்கள் 81 பேர் சிறையில் அடைப்பு

மதுரை:

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் நாட்டையே உலுக்கிவிட்டது. அது மாணவர்களின் போராட்டமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் எங்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

‘நீட்’ தேர்வை எதிர்த்து மதுரையில் தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று மதுரை தமுக்கம் முன்புள்ள தமிழன்னை சிலையில் மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

தமிழன்னையிடம் முறையிடுவது போல போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் 81 பேரை கைது செய்த போலீசார் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

போராட்டம் நடத்திய மாணவர்கள் மாலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போலீசார், மாணவர்கள் 81 பேரை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து மாணவர்கள் 81 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை சிறையில் அடைத்த சம்பவம் மதுரையில் மாணவ-மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாணவர் போராட்டம் தீவிரமடைவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top