நீட், தமிழ்நாடு முழுவதும் வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் நாட்டையே உலுக்கிவிட்டது. அது மாணவர்களின் போராட்டமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் எங்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

அரியலூர் கலைக்கல்லூரி மாணவர்கள் 3வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கேட்காமல் மாணவர்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் கல்லூரிக்கு நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. ஆனால் அரியலூர் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்திவருகிறார்கள்.

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தக் கல்லூரியும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று 7.9.2017 போரோட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி கூடிய மாணவர்களை போலீசார் இழுத்துச் சென்றும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். மதுரை தமுக்கம் மைதானம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெயர் பெற்றது. மீண்டும் அந்த நிலை உருவாகிவிடக் கூடாது என்ற நோக்குடன் காவல்துறையினர் மாணவர்களை அப்பறப்படுத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் மட்டும் இன்றி பள்ளி மாணவர்களும் அனிதாவுக்கு நீதி கேட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களின் உயர்கல்வியைப் பாதிக்கும் நீட் வேண்டவே வேண்டாம் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதே போன்று நெல்லை அருகே சங்கரன்கோவில் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களும், அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள பள்ளியின் மாணவர்களும் சாலை மறியல் செய்தனர். மயிலாடுதுறையிலும் நகராட்சி பள்ளி மாணவர்கள் நீட் தடை கேட்டு போராட்டத்தில் குதித்தார்கள்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே நீட் தேர்விற்கு எதிராகப் போராட்டம் வெடித்துவரும் நிலையில் இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்தப் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் படி காவல்துறையினர் எச்சரித்து வருவதாகக் கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top