கப்பலோட்டிய தமிழன் வ.உ..சி க்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்

 

 

இன்று வ.உ.சி. பிறந்தநாள் 

செப்டெம்பர் 5. 1872 –நவம்பர் 18. 1936

 

 

பிராம்மணர் – பிராமணரல்லாதார் என்ற வகுப்புவாதப் பூசல், விடுதலை பாசறையையே பிளவுபடுத்திவிடுமோ என்ற அச்சம் அந்நாளில் வ.உ.சியைப் போன்ற  பிராம்மணரல்லாத தேசபக்தர்களுக்கு இருந்தது. அதனால், நீதிக்கட்சி கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவதைத் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதி வ.உ.சி. அதனை ஆதரித்தார். இதனால், அன்று தமிழ்நாடு காங்கிரஸில் முன்னணியிலிருந்த பெருந்தலைவர்கள் வ.வு.சி.யை வகுப்புவாதியாகக் கருதும் நிலைமை ஏற்பட்டது. தேசத்துரோகி என்று கூட வருணித்துப் பிரச்சாரம் செய்தனர். இதனை, வ.உ.சி.யின் வாக்கைக் கொண்டே அறிய முயல்வோம் .

 

” தேச அரசாட்சியை  மீட்பதற்காகத் தேச ஜனங்கள் சாத்விக எதிர்ப்பைக் கைக்கொண்டு போராடும் காலத்தில் தேசாபிமான மில்லாது புறங்காட்டி ஓடுகின்றீரே” என்று என்னிடம் கேட்ட ஒரு பாரிஸ்டர் புன்மொழியும்.

 

‘ராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்று தேசத் துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம் பிள்ளை’ என்று பொருள் படும்படி எழுதிய ஒரு பத்திரிகாசிரியர் புன்மொழியும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளர்வதேயன்றி குறைவதும் அழிவதும் இல்லை.

 

“விளக்குப் புகவிருள்சென்றாங்கு ஒருவன்

தவத்தின்முன் நில்லாதாம் பாவம்”

 

என்றபடி, தேசாபிமான ஒளிமுன் தேசத்துரோக இருள் நில்லாது. இவ்வுண்மையயை அவர் அறிவராக.”

{ வ.உ.சி.யின் ‘எனது அரசியல் பெருஞ் சொல்’ என்னும் நூலிலிருந்து }

 

வ.உ.சிதம்பரனார், காங்கிரசிலிருந்து விலகிய பின்னரும் காந்தியடிகளிடம் மாறாத  மதிப்பு வைத்திருந்தார். தமது ‘சுயசரிதையில்’, ” உலகெலாம் புகழும் நலனெலாம் அமைந்த காந்திமா முனிவன்” என்று வருணித்தெழுதி காந்தியடிகளை வழிபடுகின்றார்.

 

காங்கிரசுக்கு வெளியேயிருந்த நிலையிலும், வேலூர் அ.குப்புசாமி முதலியார், சென்னை எம்.எஸ்.சுப்ரமணிய அய்யர், சிதம்பரம்  என்.தண்டபாணிப்பிள்ளை ஆகிய தேசபக்தர்கள் மீது அரசு தொடுத்த அரச  நிந்தனை வழக்கில் ஆஜராகி, அந்தத் தேசபக்தர்களுக்கு விடுதலை தேடிக் கொடுத்தார். ஆம் பிரதிபலனை எதிர்பாராமல்!

 

இவ்வளவிருந்தும், வ.உ.சிதம்பரனாரின் தேசபக்தியைச் சந்தேகித்தனர் அந்நாளைய காங்கிரஸ்காரர்கள். 1939-ஆம் ஆண்டில் வ.உ.சி சிலை நிறுவுவதற்கு நான் [ ம. பொ.சிவஞானம் ]  செயலாளனாக இருந்த சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவைக் கோரினேன். நான் முன்மொழிந்த வ.உ.சி. சிலை நிறுவ ஆதரவு தரும் தீர்மானம் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டு விட்டதென்றாலும், அக்கமிட்டியின் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி, காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அவர் அப்படி மறுத்தது முறையல்ல வென்றாலும், அவரோடு போர் நடத்தி, வகுப்புவாதப் பூசலை வளர்த்துவிட நான் விரும்பவில்லை. அதனால், பொது மக்களிடம் பொருளுதவி பெறுவதென்று முடிவுக்கு வந்தேன்.

 

சென்னை டிராம்வே தொழிலாளர் சங்கம், என் தலைமையில் இயங்கி வந்த முதல்  சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி, இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றிடமிருந்தும், இன்னும் பல நிறுவனங்களிடமிருந்தும் பொருளுதவி பெற்றேன். சென்னை ஆமில்டன் வாராவதி அருகிலுள்ள விறகு தொட்டிக் கடைக்காரர்களிடமும் பொருள் திரட்டினேன். என்ன திரட்டினாலும், வ.உ.சி.யின் முழு உருவச் சிலை செய்வதற்குத் தேவைப்படும் அளவுக்குப் பொருள் கிடைக்கவில்லை. அதனால், முக உருவச்சிலை மட்டும் நிறுத்துவதென்று முடிவுக்கு வந்தேன். சென்னை பக்கிங்காம் – கர்னாடிக் ஆலைத் தொழிலாளர் தலைவரும் காங்கிரசுக்காரருமான பெரம்பூர் திரு.எஸ். பக்கிரி சாமிப் பிள்ளை, குறைந்த விலைக்கு வ.உ.சி.யின் முக உருவச்சிலையைத் தயாரித்துத் தர முன் வந்தார்.

 

சிலையை காங்கிரஸ் மாளிகையின் முன்புள்ள கொடி மரத்துக்கு அருகே வைக்கவேண்டும் மென்பது என் விருப்பம். ஆனால் தமிழநாடு காங்கிரசுக்கு கமிட்டி அதற்கு அனுமதி தரவில்லை. சிலை வைப்பதற்கு வேறு இடத்தையேனும் தேர்ந்தெடுத்துக் கூறுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு எழுதினேன். அதற்கு பதிலே கிடைக்கவில்லை. சிலைத் திறப்பு விழாவுக்குத் தேதியை நிச்சயத்துவிட்டேன். காங்கிரஸ் மகாசபையின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட சேலம் திரு.சி.விஜயராகவாச்சாரியாரை நேரில் சந்தித்து சிலையைத் திறந்துவைக்க அவரது இசைவைப் பெற்றுவிட்டேன். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸின் அனுமதி கிடைக்காததால், குறித்த தேதியில் சிலைத் திறப்பு விழா நடத்துவது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு காங்கிரசின் மீது சினங் கொண்டவனாகி, அதன் அனுமதிக்காகக் காத்திராமல், சிலைத் திறப்பு விழாவை நடத்தத் துணிந்தேன்.

 

சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம்  எழுதிய  ‘எனது போராட்டம்’ என்ற நூலிலிருந்து 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top